Search This Blog

Friday, November 17, 2023

அப்பாக்கள் அழுவார்களா???


 சில சமயங்களில் சில ஆண்களின் கண்களை உற்று நோக்காதீர்கள். 


எல்லோரும் புதுத்துணி எடுத்தாச்சு நாமதான் எடுக்கலை ன்னு சொல்லும் பையனின் ஏக்கத்தை தீர்த்து வைக்கமுடியாமல் கீழ்நோக்கும் அப்பாக்களின் கண்களை, 


அம்மாவை தரக்குறைவாக பேசும் மனைவியின் பேச்சினை நிறுத்த முடியாமல் தன் இயலாமையை எண்ணி 

துயருறும் கணவர்களின் கண்களை, 


துரோகத்தை தாங்கமுடியாமல் காதலியின் கைகளை பிடித்துக்கொண்டு 

நானென்ன செய்தேன் என்று அழுது கெஞ்சிக்கொண்டிருக்கிற காதலனின் கண்களை, 


கடன்காரர்கள் வெளியே நிற்கிறார்கள் என்கிற மகனின் தாழ்வான குரலுக்கு பதில் தரமுடியாமல் கூனி குறுகும் குடும்ப தலைவனின் கண்களை, 


தன்னை விட சிறியவனின் திருமணத்தில் உனக்கு அடுத்தது எப்போ? என்ற கேள்வியை எதிர்க்கொள்ளும் முதிர்கண்ணனின் கண்களை, 


வரிசையில் நிற்கும்போது தன்னை முந்திச்செல்லும் வலியவனிடம் எதிர்த்து பேச திராணியில்லாமல் விட்டுக் கொடுக்கும் அப்பாவியின் கண்களை, 


பனிரெண்டு மணிநேர வேலைக்கு பிறகு வியர்வை படிந்த முகம் சட்டையுடன் டிராஃபிக் சிக்னலில் பச்சை விளக்குக்காக காத்திருக்கும் பரிதாபத்துக்குரிய மாத சம்பளகாரனின் கண்களை, 


சரியாக உண்ணும் போது இன்னும் எத்தனை நாளைக்கு தான் வேலை கிடைக்காமல் இப்படியே இருப்பாய் என்ற தந்தையின் நக்கலுக்காக பாதியில் எழுந்துச்செல்லும் வேலையில்லா பட்டதாரியின் கண்களை, 


உச்சி வெயிலில் மேல் சட்டை இல்லாமல் சாலை வேலை செய்யும் ஒருவன் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று உட்கார்ந்த வேளையில் மேலாளரின் அதட்டல் சத்தம் கேட்டு எழுந்து போகின்ற சாமனியனின் கண்களை, 


இருபதாம் தேதியே சம்பளம் தீர்ந்த நிலையில் இன்னும் பத்து நாட்கள் எப்படி ஓட்டமுடியும் என்று நினைத்து தூங்காமல் தவிக்கும் சராசரி மனிதனின் கண்களை, 


எப்போதும் உற்று நோக்காதீர்கள்

அப்படி பார்த்தீர்களானால் கரைந்து போவீர்கள்.....

மக்களை ஈர்க்கும் மறவந்தே கடற்கரை

*ஒரு பக்கம் கடல் மறுபக்கம் நதி; மக்களை ஈர்க்கும் மறவந்தே கடற்கரை.*

ஒரு பக்கம் நதியையும், மறுபக்கம் அரபிக்கடலையும் கொண்ட மறவந்தே கடற்கரை, இயற்கையை ரசிப்போருக்கு ஏற்ற இடம்.

உடுப்பி மாவட்டம், பைந்துாரில் ஒரு புறம் அரபிக்கடலையும், ஒரு புறம் சவுபர்ணிகா நதியையும் கொண்டது மறவந்தே கடற்கரை. 

நெடுஞ்சாலையில் இருபுறம் கடலும், நதியை கொண்ட இந்த பகுதியை, கர்நாடகா மட்டுமின்றி, இந்தியாவில் இதுபோன்று வேறு எங்கும் பார்க்க முடியாது.

மறவந்தேயில் இருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ள அழகிய கடற்கரையுடன் கூடிய பைந்துார், பாறைகள் நிறைந்த ஒட்டினனே, பெலகா தீர்த்த நீர்வீழ்ச்சி ஆகியவை மறவந்தே கடற்கரையை சுற்றிலும் உள்ள சில முக்கிய சுற்றுலா அம்சங்கள் ஆகும்.

*எப்படி செல்வது?*

பெங்களூரில் இருந்து 420 கி.மீ., தொலைவிலும்; 
மங்களூரில் இருந்து 105 கி.மீ., தொலைவிலும் உள்ளது.

கார்வார் விரைவு ரயில் மூலம், குந்தாபுரா ரயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ., தொலைவில் மறவந்தே அருகிலுள்ள ரயில் நிலையத்துக்கு செல்லலாம்.

சாலை வழியாக குந்தாபுரா நகரில் இருந்து மறவந்தே கடற்கரைக்கு டாக்சிகள் கிடைக்கின்றன. 

குந்தாபுராவில் இருந்து 23 கி.மீ., தொலைவில் உள்ளது.

மறவந்தே கடற்கரைக்கு மிக அருகில் கடற்கரை ஓய்வு விடுதிகள் அல்லது ஹோம் ஸ்டேக்கள் உள்ளன. குந்தாபுரா நகரிலும் தங்கலாம்.

Monday, November 13, 2023

வீட்டு வாசலை அழகுபடுத்துவதன் நன்மைகள்

 வீட்டு வாசலை அழகுப்படுத்துவதன் நன்மைகள்.      


வீட்டு  வாசலை சுத்தமாகவும் அலங்கரித்தும் வைப்பதன் மூலம் நேர்மறை ஆற்றல் வீட்டுக்குள் நுழையும். இது அந்த வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு நற்பலன்களையும் செல்வ செழிப்பையும் கொடுக்கும். வாசல் கதவை மாவிலை தோரணங்கள் அலங்காரப் பொருட்கள் கொண்டு அலங்கரியுங்கள். தெய்வ சிலைகளை வீட்டு வாசலில் வைத்து அலங்கரிப்பது நேர்மறை ஆற்றலை அதிகரித்து அதிர்ஷ்டத்தை அளிக்கும். வாசலின் அருகில் கண்ணாடி பவுலில் தண்ணீர் நிரப்பி அதில் மலர்களை மிதக்க விடுவதும் வாஸ்து சாஸ்திரத்தின் படி நன்மை தரும் விஷயமாகும். வீட்டின் வாசல் எப்போதும் நல்ல வெளிச்சத்தோடு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். காலை வேளையில் வீட்டின் வாசலில் சூரிய வெளிச்சம் நன்றாக பட வேண்டும். மாலை வேளையில் நுழைவு வாயிலில் நல்ல வெளிச்சம் இருக்குமாறு விளக்குகளை பொருத்துங்கள். மணி பிளான்ட் போன்ற அதிர்ஷ்டத்தை வரவழைப்பதாக நம்பப்படும் செடிகளை வீட்டின் முன் பக்க கதவுக்கு அருகில் வளர்க்கலாம்.  உடைந்த பொருட்கள், குப்பை கூடைகள் செருப்புகளை அடுக்கி வைக்கும் ரேக்குகள் ஆகியவற்றை வீட்டு வாசலுக்கு முன்பாக வைப்பதை தவிருங்கள்.